» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்களுக்கு வரி குறைப்பு: அதிபர் டிரம்ப் உத்தரவு!

ஞாயிறு 16, நவம்பர் 2025 1:37:26 PM (IST)

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரியை குறைத்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளின் பொருட்கள் மீது கணிசமாக வரியை உயர்த்தி அறிவித்தார். இதனால் உள்நாட்டு பொருளாதார நிலை உயரும் என்று அவர் திட்டமிட்டார். ஆனால் உயர்த்தப்பட்ட வரிகளின் எதிரொலி, அமெரிக்க நுகர்வோர்களை பாதிப்பதை இப்போதுதான் டிரம்ப் உணரத் தொடங்கி உள்ளார்.

சமீப காலமாகவே அமெரிக்க நுகர்வோர்கள் பொருளாதார கவலைகளை வெளியிட்டனர். இதனால் பலவிதமான சலுகைகளை அறிவித்து மக்களை கவர நினைத்தார் டிரம்ப். இருந்தபோதிலும் சமீபத்தில் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சியில் நடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.

இதையடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு டிரம்ப் பணிய ஆரம்பித்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் வரிகுறைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான வரிகளை குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில் மீதான டிரம்பின் வரி விதிப்பு அமெரிக்க நுகர்வோர் பாதிக்க ஒரு முக்கிய காரணமாகும். இதேபோல தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலாப் பொருட்கள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் மீதான வரிகளையும் நிர்வாக உத்தரவு நீக்குகிறது. இவற்றில் பல பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈக்வடார், கவுதமாலா, எல் சல்வடார் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை எளிதாக்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்த பிறகு டிரம்ப் இந்த பொருட்களின் வரியை குறைத்து அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory