» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)



இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை (ஆக. 30) மாலை சென்றார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைஒத் தொடர்ந்து தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முன்னதாக, மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் கைக்குலுக்கி வரவேற்றார். உலக அளவில் ஏற்பட்டுவரும் நெருக்கடி மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா - சீனா இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்.

''மாற்றத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார். மேலும், ''சிறந்த அண்டை நாடுகளாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

இத்துடன், கடந்த ஆண்டு ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்ற வெற்றிகரமான மாநாட்டில் பங்கேற்றது குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், இந்தியா - சீனா இடையிலான ராஜதந்திர உறவின் 75வது ஆண்டின் நிறைவையும் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட கால கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory