» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்

வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)



அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்து தீப்பிடித்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் டி.எச்.எல். மற்றும் பெட்எக்ஸ்சை தொடர்ந்து மிகப்பெரிய சரக்கு கையாளுதல் மற்றும் கூரியர் நிறுவனமாக யுனைடெட் பார்சல் சர்வீஸ் (யு.பி.எஸ்.) உள்ளது. உலகம் முழுவதும் 220 நாடுகளுக்கு பார்சல் சேவை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் தலைமையிடமாக அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே உள்ளது.

அங்குள்ள முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில் இந்த நிறுவனத்துக்கான தனிவிமான சேவை நிலையம் உள்ளது. பெட்எக்ஸ், டி.எச்.எல் போல யு.பி.எஸ். நிறுவனமும் தனியாக விமானங்களை வைத்து உள்ளூர் முதல் உலக நாடுகளுக்கு பார்சல் சேவை வழங்கி வருகிறது. லூயிஸ்வில்லேவில் இருந்து தினமும் 300 விமானங்களை இயக்கவும் 125 விமானங்களை நிறுத்தவும் 90 கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கான தனி இடத்தை கொண்டுள்ளது.

முகமது அலி விமானநிலையத்தில் இருந்து யு.பி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஹவாய் தீவின் தலைநகரமான ஹொனோலுலுவுக்கு புறப்பட தயாரானது. 6 ஆயிரத்து 920 கி.மீ. பயண தூரத்தை கடப்பதற்காக 2006 முதல் இயக்கப்பட்டு வரும் 34 ஆண்டு பழமையான மெக்டொனால்டு டக்லஸ் சரக்கு விமானத்தில் 1 லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.

மாலை 5 மணியளவில் ஓடுதளத்தில் இருந்து மேல் எழும்பி வானில் பறக்கமுயன்றபோது விமான என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனால் விமானநிலையம் அருகேயே நடுவானில் இருந்து கீழே விழுந்து தரையில் மோதியது. உடனே அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து நெருப்பு பந்துபோலாகி வெடித்து சிதறியது. இதனால் வானில் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 விமானிகள் மற்றும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த 4 பேர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பரவிய தீயை போராடி அணைத்து கட்டுப்படுத்தினர். மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகில் வேலை செய்து கொண்டிருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமான விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory