» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி

வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஊசி முதல் ஏ.சி. வரை அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை உலக நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் அதிக பொருட்களை உற்பத்தி செய்யும் சீனாவின் பொருட்களை உலக நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றது.

சீனாவில் இருந்து உலகநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு தனித்தனியாக வரி நிர்ணயம் செய்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு செல்போன்கள், ‘மைக்ரோ சிப்’ என்னும் நுண்சில்லுகள், கணினி பொருட்கள் உள்ளிட்டவை சீனாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக அமெரிக்காவுக்கு அதிகளவிலான வரியை சீனா விதித்து வந்தது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் தமது நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு 27 சதவீதம், அண்டை நாடான சீனாவுக்கு 104 சதவீதம் என அதிரடி காட்டினார். இதற்கு உலக நாடுகளிடையே கடும் கண்டனம் எழுந்தது. இதனால் பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் 90 நாட்கள் நிறுத்திவைத்துள்ளார்.

ஆனால் சீனாவுக்கு மட்டும் இந்த வரி விதிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சீனா அரசாங்கம் கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் அமெரிக்கா மீது பதிலுக்கு வரி விதிக்க முடிவு செய்தது.

அதன்படி அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு போட்டியாக அதன்மீது 125 சதவீதம் பரஸ்பர வரியை சீனா விதித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீதான வரிவிதிப்பை மேலும் 20 சதவீதம் அதிகரித்து 145 சதவீதமாக வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். ஆனால் ஸ்மார்ட்போன், மைக்ரோ சில்லுகள் முதலிய தொழில்நுட்ப பொருட்களுக்கான வரியில் இருந்து மட்டும் சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது.

இதனால் கடுப்பான சீனா அரசாங்கம் அமெரிக்காவின் ‘போயிங்’ விமான நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் இறக்குமதி செய்யக்கூடாது, அமெரிக்கா நாட்டிற்கு பார்சல் சேவை வழங்கக்கூடாது என கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தநிலையில் சீன பொருட்களுக்கு இதுவரையில் இல்லாத வகையில் 145 சதவீத வரியை மேலும் 100 சதவீதம் உயர்த்தி 245 சதவீதமாக அதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதற்கு சீனா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வர்த்தகப்போருக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப்போர் உக்கிரம் அடைந்துள்ளதால் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மேலும் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory