» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வெற்றிகரமாக சென்றடைந்தது குரூ டிராகன்: பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
திங்கள் 17, மார்ச் 2025 9:02:42 AM (IST)
சுனிதா வில்லியம்சை மீட்டுக் கொண்டு வருவதற்காக ‘குரூ டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. இதையடுத்து அந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் இந்த வாரம் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.
ஆய்வு பணிகளை முடித்துவிட்டு 8 நாட்களில் பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அவர்கள் விண்வெளிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.
இதனையடுத்து வேறொரு விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர நாசா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்தன. இதனால் அவர்கள் இருவரும் மாதக்கணக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த வகையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் உதவியை நாடினார்.
அதனை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘குரூ டிராகன்’ விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விரைவில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என உறுதியளித்தார்.
அதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘குரூ டிராகன்’ விண்கலம் ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவை சேர்ந்த கிரில் பெஸ்கோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ‘குரூ டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி நேற்று காலை 11.15 மணியளவில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்ததும் அதில் இருந்த விண்வெளி வீரர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்தனர்.
அவர்களை கண்டதும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் பிற விண்வெளி வீரர்கள் உற்சாகமடைந்தனர். அவர்கள் புதிதாக வந்த விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவியும், கைகுலுக்கியும் வரவேற்றனர். இந்த காட்சிகள் அனைத்தையும் நாசா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பியது.
சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஏற்கனவே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்பட மொத்தம் 7 பேர் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 4 விண்வெளி வீரர்கள் அவர்களுடன் இணைந்துள்ளனர்.
தற்போது சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 4 பேரும் சில வாரங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்வார் என்று தெரிகிறது. அதே வேளையில் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் இந்த வாரத்துக்குள் ‘குரூ டிராகன்’ விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - இத்தாலி உறவில் புதிய சகாப்தம்: மோடி - ஜார்ஜியா மெலோனி கூட்டு அறிக்கை!
புதன் 20, மே 2026 4:52:04 PM (IST)

நார்வே பெண் நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்றார் பிரதமர் மோடி! – ராகுல் காந்தி சாடல்!
செவ்வாய் 19, மே 2026 3:39:00 PM (IST)

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!
திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)

ஐரோப்பியப் பயணம் தொடக்கம்: நெதர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு!
சனி 16, மே 2026 12:25:34 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் அனுமதி: ஈரான் அறிவிப்பு
வெள்ளி 15, மே 2026 4:47:36 PM (IST)

எரிசக்தி பாதுகாப்பில் புதிய மைல்கல்: பிரதமரின் யுஏஇ பயணத்தில் 5 முக்கிய ஒப்பந்தங்கள்!
வெள்ளி 15, மே 2026 3:41:49 PM (IST)


