» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்.பி.க்களாக பதவியேற்பு

ஞாயிறு 5, ஜனவரி 2025 12:25:09 PM (IST)



அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்றார். அவர் வருகிற 20-ந் தேதி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் போட்டியிட்டனர்.

அந்த வகையில் பிரதிநிதிகள் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 6 பேர் வெற்றி வாகை சூடினர். அவர்கள் பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, அமி பேரா, சுகாஸ் சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீ தனேதர் ஆவர். இவர்கள் 6 பேரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.

சென்னையில் பிறந்தவரான பிரமிளா ஜெயபால் ஜனநாயக கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். 2017 முதல் வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் பிரமிளா, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளார். பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வம்சாவளி பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 முதல் இல்லினாயிஸ் மாகாணத்தின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபை எம்.பி. ஆகி உள்ளார். இவர் டெல்லியில் பிறந்தவர். அமெரிக்காவின் வர்த்தக துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவரான ரோ கன்னா, கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது தொகுதியில் இருந்து தொடர்ந்து 5-வது முறையாக எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

`இந்திய-அமெரிக்கர்களின் காட்பாதர்’ என்று அழைக்கப்படுகிறார் அமி பேரா. மற்ற இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்களை காட்டிலும் அமெரிக்க அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த நபராக திகழ்கிறார். இவர் தொடர்ந்து 7-வது முறையாக கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

விர்ஜினியா மாகாண எம்.பி.யாக இருந்து வந்த சுகாஸ் சுப்பிரமணியம் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் விர்ஜினியா மாகாணத்தின் 10-வது தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிப் பெற்றார்.

மராட்டிய மாநிலத்தில் பிறந்தவரான ஸ்ரீ தனேதர் கடந்த தேர்தலில் மிச்சிகன் மாகாணத்தின் 13-வது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் 2-வது முறையாக அதே தொகுதியில் இருந்து எம்.பி. ஆகி உள்ளார்.

பிரமிளா ஜெயபால் உள்பட 6 பேரும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் 6 பேரும் பிரதிநிதிகள் சபை தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹக்கீம் ஜெப்ரிசுக்கு வாக்களித்தனர். எனினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் ஜான்சன் பிரதிநிதிகள் சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவியேற்றவர்களில் சுகாஸ் சுப்பிரமணியம், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா மற்றும் ஸ்ரீ தனேதர் ஆகிய 4 பேரும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்க வரலாற்றிலேயே பிரதிநிதிகள் சபையில் அதிக இந்து எம்.பி.க்கள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory