» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேசத்தில் ஹிந்து மதகுருவுக்கு ஜாமின் மறுப்பு : நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 2, ஜனவரி 2025 5:48:49 PM (IST)
வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இஸ்கான் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் வழங்க, நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே, ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த அராஜக செயல்களுக்கு எதிராக அமைதியான முறையில், இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி போராடி வந்தார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில், நவம்பர் 25ம் தேதி கிருஷ்ணதாஸை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இஸ்கான் துறவியின் கைதிற்கு, எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஜாமின் கோரி, இஸ்கான் துறவி சார்பில், வங்கதேச நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜன.,02) விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் சின்மயி கிருஷ்ண தாஸ் சார்பில் ஆஜராக எந்த வழக்கறிஞரும் நுழைய முடியாத நிலையில் விசாரணை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது, இஸ்கான் துறவிக்கு ஜாமின் வழங்க, வங்கதேச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வங்கதேசத்தின் முன்னாள் துணை அட்டர்னி அபுர்பா குமார் கூறியதாவது: நாங்கள் நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்தோம். அரசுத் தரப்பில் ஜாமின் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணதாஸை ஜாமினில் வெளியே விட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் துறவிக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.