» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை மீட்க நடவடிக்கை: மத்திய அரசு உறுதி
செவ்வாய் 31, டிசம்பர் 2024 3:53:31 PM (IST)
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. நர்சிங் படித்துள்ள நிமிஷா பிரியா கடந்த 2011ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் நிமிஷா பிரியா செவிலியராக வேலை செய்தார். அதேவேளை, ஏமனில் தனியாக மருந்தகம் வைக்க நினைத்த நிமிஷா அந்நாட்டை சேர்ந்த மஹிதி என்பவரின் உதவியை நாடினார். ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மஹிதி, நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார்.
மேலும், அவரை பல ஆண்டுகளாக கொடுமைபடுத்தியுள்ளார். மஹிதி குறித்து நிமிஷா ஏமன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகாரை ஏற்க மறுத்த போலீசார், நிமிஷாவை கைது செய்து 6 நாட்கள் சிறையில் அடைத்தனர். பாஸ்போர்ட்டை தராமலும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த மஹிதியிடம் இருந்து தப்பிக்க கடந்த 2017ம் ஆண்டு ஜுலை மாதம் அவருக்கு மயக்க ஊசியை நிமிஷா செலுத்தியுள்ளார். மருந்தின் தாக்கம் அதிகமானதால் மஹிதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு 2018ம் ஆண்டு ஏமன் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.
இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகாரமான நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியாவை காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் நிமிஷா மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கக்கோரி ஏமன் அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நிமிஷா பிரியாவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்தில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் நிமிஷாவை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது' என்றார்.