» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகம்!

சனி 8, பிப்ரவரி 2025 12:31:40 PM (IST)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 45 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பாஜக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன. இந்நிலையில், காலை 11.45 மணி நிலவரப்படி பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றி தேவை. தற்போதைய முன்னிலை நிலவரங்கள், பாஜக மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறுவதைக் காட்டுகிறது. இதனால் டெல்லி பாஜக அலுவலகத்தில் உற்சாகம் களைகட்டியுள்ளது. இசைக்குழுவின் துள்ளல் இசைக்கு ஏற்றவாறு தொண்டர்கள் உற்சாக நடனமாடினர். மேலும், இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பாவனா, பிஜ்வாசன், சத்தார்பூர், த்வார்கா, கோண்டா, கோகல்பூர், கிரேட்டர் கைலாஷ், ஹரி நகர், ஜங்க்புரா, கல்காஜி, கரவால் நகர், கஸ்தூரிபா நகர், மதிபூர், மால்வியா நகர், மங்கோல்புரி, மாடல் டவுன், மோதி நகர், முஸ்தபாபாத், நஜாப்கர், நெரிலா, ஓக்லா, பாலம், ஆர்.கே. புரம், ராஜிந்தர் நகர், ரஜோரி கார்டன், ரோஹினி, ஷாலிமார் பாக், ட்ரி நகர், உத்தம் நகர், விகாஸ்புரி, விஸ்வாஸ் நகர், வாசிர்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

தேர்தல் முன்னிலை நிலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக டெல்லி மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா, "நாங்கள் தேர்தல் போக்குகளை வரவேற்கிறோம். எனினும், முடிவுகளுக்காகக் காத்திருப்போம். பாஜகவின் நல்லாட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மோசமான நிர்வாகத்திற்கும் இடையில் நடந்த தேர்தலில் மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து பெரிய முகங்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர் ஊழல் முகங்கள் என்பதால், இன்று அவர்கள் தோற்பார்கள். நீங்கள் பொதுமக்களிடம் நேர்மையற்றவராக இருந்தால், பொதுமக்களும் இதேபோன்ற முடிவைக் கொடுப்பார்கள். பிரதமர் மோடியின் தலைமையில், டெல்லியில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.

பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், "பாஜக மிகவும் முன்னிலையில் உள்ளது. முடிவுகளுக்காக நாங்கள் காத்திருப்போம். இதை விட சிறந்த வாக்குகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். டெல்லியின் ஒவ்வொரு பிரிவினரும் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகிவிட்டனர். இதை தேர்தல் போக்குகள் உணர்த்துகின்றன. ஆம் ஆத்மி கட்சி காட்டிய செயலற்ற தன்மை மற்றும் ஊழல் - அவர்கள் மக்களின் ஆதரவை இழந்ததற்கான காரணங்கள்" என தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்; இறுதி முடிவு பாஜகவுக்கு சாதகமாக இன்னும் சிறப்பாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர் மோடியின் வாக்குறுதிகளில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. இது எங்களுக்கு ஒரு நேர்மறையான முடிவு. டெல்லி மக்கள் 'பரிசோதனை' அரசியலால் சலிப்படைந்துவிட்டனர்" என்று பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாஜக மூத்த தலைவரான நலின் கோஹ்லி, "தற்போதைய முன்னணி நிலவரங்கள் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு முன் இரண்டு மாடல்கள் இருந்தன. தேர்தல் அறிக்யைில் தெரிவிக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் பாஜகவின் மாடல். பேசுவதைத் தவிர வேறொன்றையும் செய்யாத ஆம் ஆத்மி கட்சியின் மாடல்." என தெரிவித்துள்ளார்.

காலை 11.45 மணி நிலவரப்படி பாஜக 45 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory