» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலாற்றின் மீது தடுப்பணைகள் கட்டப்படும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
செவ்வாய் 7, ஜனவரி 2025 11:02:18 AM (IST)
பாலாற்றின் மீது மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றார். குப்பம் திராவிட பல்கலைக்கழக வளாகத்தில் ‘சுவர்ண குப்பம் விஷன் -2029’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு நான் முதல் வராக இருந்தாலும், குப்பம் தொகுதி மக்களுக்கு நான் எம்.எல்.ஏ.தான். என்னை 8 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
கடந்த ஆட்சியினரின் காழ்ப்புணர்வால் கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதி எவ்வித வளர்ச்சி யையும் காணவில்லை. இனி குப்பத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 2029-க்குள் ஒரு மாடல் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளேன். இந்த தொகுதியில் உள்ள 65 ஆயிரம் குடும்பத்தினரும் முன்னேற வழிவகுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் இங்கு அமைய உள்ளன.
அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். குப்பம் தொகுதி முழுவதும் சோலார் மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சாலை, குடிநீர், மின்சாரம், அனைவருக்கும் வீடு,வேலை வழங்குவதே என் லட்சியம். மேலும் 100 சதவீதம் கழிப்பறை உள்ள தொகுதியாகவும் குப்பம் மாற்றப்படும்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஏரியா மருத்துவமனை கட்டி இலவச மருத்துவ சேவை வழங்கப்படும். ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும். திறமையான தலைவன் இருந்தால் எதையாவது சாதிக்கலாம் என்பதை தெலுங்கு தேசம் கட்சிதான் நிரூபித்துள்ளது. இங்கு திராவிட பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் தான்.
மாநிலத்தில் தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறோம். வரும் ஜூன் மாதத்துக்குள் ஹந்திரி-நீவா குடிநீர் திட்ட பணிகளை நிறைவு செய்து, அதன் மூலம் கிருஷ்ணா நதிநீரை குப்பத்துக்கு கொண்டு வருவோம். இதேபோன்று கோதாவரி நீரையும் இங்கு கொண்டு வருவோம். தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை பெருக்குவோம்.
வருங்காலங்களில் சொட்டுநீர் பாசனமே இருக்கும். பாலாற்றின் மீது மீண்டும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் மக்கள் தொகை கவலை அளிப்பதாக உள்ளது. அதிகமாக குழந்தைகளை பெற் றுக் கொள்ளுங்கள். ஆந்திர மக்கள் தொகை ஆண்டுக்கு 1.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பெறுகிறது. இதுகுறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.