» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பேச்சு!

செவ்வாய் 3, டிசம்பர் 2024 11:00:05 AM (IST)

தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதற்கிடையே, பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். தமிழகத்தில் தற்போதைய சூழல் எப்படி உள்ளது? மழை, வெள்ளத்தால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? விவசாய நிலங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பனவற்றை முதல்-அமைச்சரிடம் பிரதமர் தெளிவாக கேட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory