» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மேற்கு வங்காளத்தில் 73 சதவீத வாக்குப்பதிவு: 5-ம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது

செவ்வாய் 21, மே 2024 8:28:42 AM (IST)

நாடாளுமன்றத்துக்கான 5-ம் கட்ட தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மேற்கு வங்காளத்தில் 73 சதவீதம் வாக்குப்பதிவானது. மராட்டியத்தில் ஓட்டுப்பதிவு குறைந்தது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 5-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), ஸ்மிரிதி இரானி (அமேதி) மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி (ரேபரேலி) உள்பட 695 வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டனர். இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 254 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.இந்த தேர்தலில் 8 கோடியே 95 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக 94 ஆயிரத்து 732 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வட மாநிலங்களில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், காலையிலேயே ஏராளாமானோர் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை நேரத்தில் விறுவிறுப்பாக இருந்த வாக்குப்பதிவு, மதிய நேரத்தில் குறைந்தது. பின்னர் மாலையில் விறுவிறுப்படைந்தது.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, பியூஸ்கோயல் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் ரிசர்வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இதேபோல் நடிகர்கள் தர்மேந்திரா, அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்வீர்சிங், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய்குமார், நடிகைகள் ஜெயாபச்சன், ஐஸ்வர்யா ராய், தீபிகாபடுகோன், ஜான்வி கபூர், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட மும்பை சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் மதுரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், நடிகையுமான ஹேமமாலினியும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். 5-ம் கட்ட தேர்தலில் 57.47 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதில் மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 73.02 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், குறைந்தபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 48.88 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதேபோல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாராமுல்லா தொகுதியில் 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே மிக அதிகபட்சமாகும். கடந்த 1984-ம் ஆண்டு 58.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தேர்தல் அமைதியாக நடந்தபோதும், மேற்கு வங்காள மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மேற்கு வங்காளத்தில் பாரக்பூர், பொங்கான் மற்றும் ஆரம்பாக் உள்பட பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர்.சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயலிழந்ததாகவும், முகவர்கள் சாவடிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து 1,036 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

ஹூக்ளி தொகுதியில் பா.ஜனதா எம்.பி.யும், கட்சியின் வேட்பாளருமான லாக்கெட் சாட்டர்ஜி வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆஷிமா பத்ரா தலைமையில் சிலர் கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு மத்திய படையினரும், போலீசாரும் விரைந்து வந்து இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே உத்தரபிரதேச காங்கிரஸ் பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ரேபரேலியில் உள்ள சரேனியில் உள்ள வாக்குச்சாவடி எண் 5, ரசூல்பூர் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் வாக்குச்சாவடி மூடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் திரும்பிச் செல்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கோண்டா தொகுதியின் சமாஜ்வாடி வேட்பாளர் ஸ்ரேயா வர்மா, மங்காபூர் பகுதியில் உள்ள சாவடி எண் 180 மற்றும் 181-ல் நியாயமான வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார்.

இதேபோல் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் ஆதித்தய தாக்கரே, மராட்டியத்தில் வாக்குச்சாவடிகளில் போதிய வசதி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். ஒடிசாவில், பர்கர் மாவட்டத்தில் உள்ள சர்சரா அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரை வெட்டிக்கொன்றதாக கூறப்படுகிறது. இறந்தவர் சில வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இது அரசியல் கொலை என்று குடும்பத்தினர் கூறினாலும், தனிப்பட்ட பகையே இந்த குற்றத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory