» சினிமா » செய்திகள்

எங்களது திருமண முறிவுக்கு மூன்றாவது நபரே காரணம்: ஆர்த்தி ரவி விளக்கம்!

செவ்வாய் 20, மே 2025 3:47:38 PM (IST)



"எங்களது திருமண வாழ்வின் பிரச்சனைக்கு எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்" என ஆர்த்தி ரவி விளக்கம் அளித்துள்ளார்.

ரவி மோகன் - ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையே அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலளித்து ஆர்த்தி ரவியின் தாய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது ரவி மோகன் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி ரவி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘இப்போது உண்மையை அறிவீர். இதுதான் இறுதியும் அச்சமற்றதுமான விளக்கம்’ என்ற குறிப்புடன் ஆர்த்தி ரவி பகிர்ந்தவை: "கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது.

ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர்தான். 

"உங்கள் வாழ்வின் ஒளி” என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யபடும் முன்பே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல, மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன்.

எனக்கு ‘கட்டுபடுத்திய மனைவி’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்க வழக்கங்களிலிருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரை பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும். 

எந்த ஓர் உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன். ஆனால், அப்படி நடந்து கொள்ளாத பெண்களுக்கு இந்த சமுதாயம் சுமத்தும் அனைத்து கொடூரமான பட்டங்களையும் கணவரின் நலனை காப்பாற்றியும் நான் சுமக்கிறேன்.

இன்னும் சொல்வதென்றால் வாழ்வின் கடினமான சமயங்களில் கூட நாங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக, என் கணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உடன் அன்புடனே இருந்தோம். எங்கள் சமூக ஊடக பதிவுகளே அதற்குச் சாட்சி. நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எல்லோருடைய திருமண வாழ்விலும் இருப்பது போல அன்பும், விவாதமும், ஆசையும், தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நினைந்தது என்றுதான் நான் நம்ப வைக்கப்பட்டேன்.

தனது சொத்துகளை, கவுரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன்கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள RANGE ROVER காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.

உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்” என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார். அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்? அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல, அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே.

வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே வசித்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை.

எங்களை பிள்ளைகளை கருவிகளாக்கி என் தாய்மையை அனுதாபத்திற்கு உரியதாக்கி, ஆதாயம் தேட நினைப்பவள் நான் அல்ல. என்னை அவ்வாறு நினைப்பவர்கள் உண்மையில் ஒரு தாயின் சிறப்பை உணராதவர்களே! கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்திருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பெயரில் மட்டுமே! எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்கள் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.

உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்திருப்பார். எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது தந்தை வசி பாட்டி – தாத்தா வீடு அல்லது எங்கள் அலுவலகம் போன்ற நன்கு அறிந்த பொது இடங்களில் அப்பாவை சந்திக்கும் போது மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம் என்ற தெளிவாகச் சொல்கிறார்கள்.

அதை விட்டு யார் எங்கள் பிள்ளைகளின் மன அமைதியைப் பறித்தாரோ அவர் வாழும் இடத்தில் அவர்களின் தந்தையைச் சந்திக்க நிர்பந்தப்படுத்தப்படுவது, அவர்களை மேலும் அவர்கள் தந்தையை விட்டு விலகச் செய்துவிட்டது. குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர், அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படியோ சட்டப்பூர்வமாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலா நிலையில் இருந்தபோது இங்கு நடந்த ஒரு சிறு கார் விபத்து. ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தாத அந்த விபத்தில் சேதமடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக் கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால், என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள். சட்டப்படி எனக்கும் உரிமையுள்ள ஓர் இடத்திலிருந்து அவமானப்படுத்தி அனுப்பப்பட்டேன் என்பது தான்.

அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார். மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக் கூறுவதைக் கேட்கும் போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால்தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால் அல்ல. 15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தார்.

ஆனால், அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்தால் என் சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பேன். நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த இக்கட்டான சூழலில் என்னுடன் துணை நிற்கும் செய்தித் துறை, சமூக ஊடக மற்றும் பொது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு மிகுந்த பலம் அளிக்கிறது. மேலும் இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை, பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்தச் சூழ்நிலையில் என் சுய கவுரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். இன்று என் கண்ணியமும் நேர்மையும் உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளதை வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன். உண்மை தெரிந்த ஒரே நபர், என் கணவர் எனக்காக நின்று பேச மறுக்கிறார். அவருடைய மவுனத்திற்குப் பின் ஒரு நோக்கம் உள்ளது. அவருக்கு நிம்மதி கிடைக்க உண்மையில் விரும்புகிறேன். ஆனால், அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது.

நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டு அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன், ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்" என்று ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் நீண்டநாட்களாக மவுனம் காத்து வந்த ஆர்த்தி ரவி, முதல் முறையாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த ரவி மோகன், ‘கெனிஷா பிரான்சிஸைப் பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழி அவர். என்னை உடைத்துக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல தைரியம் மட்டுமே இருந்த எனக்கு, அவர் ஓர் உயிர்நாடியாக மாறினார். எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார். சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஓர் அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory