» சினிமா » செய்திகள்
அட்லீயை உருவ கேலி செய்யவில்லை: கபில் விளக்கம்
புதன் 18, டிசம்பர் 2024 11:12:47 AM (IST)
இயக்குநர் அட்லீயை உருவ கேலி செய்யவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கபில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் ஹிட்டான ‘தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கான ‘பேபி ஜான்’ திரைப்படத்தில் வருண் தவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை அட்லீ தயாரித்திருக்கிறார். விரைவில் திரையரங்கில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ‘புரமோஷன்’ வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது படக்குழு.
அப்படி ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ டிவி நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றிருந்தபோது, "நீங்கள் ஒரு நடிகரை முதன்முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?” என்று அட்லீயிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, அதற்குப் பதிலளித்த அட்லீ, "உங்களது கேள்வி புரிகிறது. ஆனால், என்னுடைய முதல் திரைப்படத்தைத் தயாரித்த ஏ.ஆர். முருகதாஸ் என்னுடைய திறமையை மட்டுமே பார்த்தாரே தவிர என்னுடைய தோற்றத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை” எனப் பதிலளித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, ஒரு தரப்பினர் உருவக் கேலிக்கு எதிராகவும், அட்லீக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டனர். ‘கோலிவுட் vs பாலிவுட்’ என்கிற ரீதியில் மோதல் பெரிதாக வெடிப்பதற்குள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கபில், "நான் உருவக் கேலி செய்யவில்லை. தேவையில்லாமல் வெறுப்பைப் பரப்பாதீர்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.