» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:02:33 PM (IST)

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். மறுபுறம் நிதானமாக ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, மைதானத்தின் நாலாபுறமும் பந்தைச் சிதறடித்தார். கேமரூன் கிரீன் வீசிய ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 21 ரன்களை விளாசினார். 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். சீராக ஆடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களும் (32 பந்துகள்), டெவால்ட் பிரேவிஸ் 41 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் கடக்காமல் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 193 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஃபின் ஆலன் 1 ரன்னில் வெளியேறினார். அதிரடி காட்டிய சுனில் நரேன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அங்ரிஷ் ரகுவன்ஷி (27) மற்றும் அஜிங்க்ய ரஹானே (28) ஓரளவுக்கு ரன் சேர்த்தாலும், சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ஒரே ஓவரில் ரஹானே மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரை வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இறுதிக்கட்டத்தில் ரோவ்மன் பவல் (31*) மற்றும் ரமன்தீப் சிங் (35) போராடியும் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
9 ரன்களில் இருந்தபோது டெவால்ட் பிரேவிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரஹானே உள்ளிட்ட வீரர்கள் கவனக்குறைவால் நழுவவிட்டனர். இதனைப் பயன்படுத்தி அவர் 41 ரன்கள் சேர்த்தார். சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சுமார் 33,241 ரசிகர்கள் திரண்டு சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறிமுக போட்டியிலேயே அசத்திய மானவ் சுதர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி
செவ்வாய் 9, ஜூன் 2026 8:25:54 AM (IST)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)

சர்வதேச தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்துக்கு முன்னேறிய பி.வி. சிந்து
வியாழன் 4, ஜூன் 2026 8:14:14 PM (IST)

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)


