» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:58:37 PM (IST)

CmvijaySeeman.jpg

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் போன்ற மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மகிழுந்து இல்லாத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் என்றாலும் ரூ.70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?.

ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?. அப்படியே உங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?.

அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் முறையா?

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் ரூ.10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?

மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா? தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?

அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டப்பேரவையிலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதல்வரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory