» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:02:34 PM (IST)

MatchboxFactCollecto.jpg

கோவில்பட்டி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளருக்கு தெரிவிக்கையில், "உங்களை தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் அவர்களின் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். 

அதன் அடிப்படையில் இன்றைய தினம் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக திட்டப்பணிகள் மேற்கொண்டுள்ளோம். அரசு மேல்நிலை பள்ளிகளில் கல்வி மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதேபோல் இனாம்மணியாச்சி பகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ள பணிகளையும், இதுபோன்ற பல்வேறு துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வின்போது பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்கள் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொண்டுள்ள திட்டப் பணிகள் பின்னூட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய கலந்தாலோசனை மேற்கொள்ள உள்ளோம். இத்திட்டம் பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

கழுகுமலை பேரூராட்சி பொறுத்தவரை மக்கள் தொகை 16,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அதன்படி 17 இலட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. பேரூராட்சி தனியாக 10 இலட்சம் மதிப்பில் 16 ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கி வருகிறது. தற்போது 7 இலட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 

அதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்குவதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதேபோல் மூப்பன்பட்டி கிராமத்தில் தொழில் முனைவோர்களால் கடலை மிட்டாய் நிறுவனம் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தொழில் முனைவராக உருவாக்குவதற்கு பல்வேறு திட்ட பணிகள் உள்ளது. 

இத்திட்டங்களை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு பொருட்கள் உள்ளது. குறிப்பாக கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தொழில், விளாத்திகுளத்தில் மிளகாய் தொழில் உள்ளது. இத்தொழிலை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு தொழில் முனைவோர்களுக்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளோம். 

உற்பத்தி பொருட்களாக இருந்தால் தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கும், சிறிய அளவில் தொழில் புரிபவர்கள் அவர்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கி தரப்படும். குறிப்பாக தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவப் பணிகள், உள் நோயாளி பிரிவு, குடிநீர், சித்த மருத்துவ பிரிவு போன்றவைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவப் பணிகள் குறித்தும், வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம், நூலகத்தின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், உணவின் தரம் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், 

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.30.85 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் வில்லிசேரி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடப் பணிகளையும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம், கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், 

அரசு பொது நூலகத்துறை கீழ் செயல்படும் ஊர்ப்புற நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், வில்லிசேரி நியாய விலைக்கடையில் பொருட்களின் தரம், எடை, இருப்பு, கைரேகை பதிவேடு போன்றவைகள் குறித்தும், இடைசெவல் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 25 விவசாயிகளுக்கு மண்வள அட்டையினை வழங்கினார்.

தொடர்ந்து, ஊத்துப்பட்டி ஊராட்சியில் தூத்துக்குடி வனக்கோட்டம்- கோவில்பட்டி வனச்சரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினையும், நாலட்டின்புத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகத் திட்டப்பணிகள் குறித்தும், வானரமுட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை கீழ் செயல்படும் கால்நடை மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும், 

மாவட்ட தொழில் மையம் சார்பில் மூலதன நிதி மற்றும் ஆற்றல் திறன் ரூ.1.51 கோடி நிதி உதவியுடன் தொழில் முனைவோரின் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் வணிக கடைகளுக்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் புனித ஜோசப் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இனாம் மணியாச்சி ஊராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இனாம் மணியாச்சி ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், மூப்பன்பட்டி கிராமத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறுங்குழும மேம்பாட்டு திட்டம் ரூ.7.13 கோடி உதவியுடன் உற்பத்தி குறுங்குழுமம் கடலை மிட்டாய் நிறுவனம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ள திட்ட பணிகளில் பின்னூட்டங்களை கள ஆய்வு மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார். மேலும், சமூகநீதி நல விடுதி, அரசு மருத்துவமனை, கோவில்பட்டி நகராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா.சரவணன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் நாகராஜன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) விஜயா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், இணை இயக்குநர் / பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் ஸ்வர்ணலதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளர் ஹரிகரன், மாவட்ட சுகாதார அலுவலர் (கோவில்பட்டி) வித்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் செல்வி அனுசியா, கோவில்பட்டி வட்டாட்சியர் அப்பணராஜ், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory