» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:33:26 AM (IST)

TanjoreATtack.jpg

தஞ்சையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், வாலிபரும் சாலையில் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் போலீஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். 

இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பலபிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய மேற்பார்வையாளர் மூலம் புகார் அளிக்கப்பட்டு பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.

அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்கின் முழுவிரம்:-

தஞ்சை ரயில் நிலையம் முன்பு விசிக சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநக ராட்சி அலுவலர்கள் அகற்றினர்.

இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக் கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் வி.சி.க.வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.

இது தொடர்பாக போலீசாருக்கும். அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், வாலிபரும் சாலையில் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Aug 18, 2026 - 11:35:33 AM | Posted IP 162.1*****

போலீஸ் மேலயே கை வைப்பியா v/s போலீசாய் இருப்பதாலேயே யாரை வேண்டுமானாலும் அடிக்கிறதா? - என்கிற விவாதத்தை கிளப்பி விட்டிருக்கிறது தஞ்சாவூர் சம்பவ வீடியோ..

JOSEPHMar 29, 1787 - 06:30:00 PM | Posted IP 162.1*****

யார் இந்த இளைஞன் என்று தெரியவில்லை !!!!! ஆனாலும் நிஜத்தில் ரியல் ஹீரோ தான் !!! முதலில் ரோடை மரித்தவர்களிடம் சரமாரியாக கேள்வி கேட்டார்!!! அடுத்து அரை விட்ட போலீசு அதிகாரியை திருப்பி அரை விட்டார் !!!👊 அரை வாங்கிய போலீஸ், சென்று மொத்த போலீசையும் கூட்டிட்டு வந்து அந்தப் பையனை கட்டி போராடி தூக்கி கொண்டு போகிறார்கள!! போலீஸ்காரர்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது !!!😭 ...... நியாயம் கேட்டுப் போராடிய அந்த இளைஞனின் அரை மணி நேர போராட்ட வீடியோ வேற லெவல் 🫶👌 பிகு :- போலீஸ்காரர்களுக்கு இது தேவைதான்..!! அரசியல்வாதி பையன் என்றால் சல்யூட் அடிப்பது சாமானியன் என்றால் அரை விடுவது!! (உதயநிதி மகனாக இருந்தால் போலீஸ் இதுபோல் அரை விடுமா என்பது கேள்வி)

PRABHAKARANAug 18, 2026 - 11:22:48 AM | Posted IP 162.1*****

ஆம்பூரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் எத்தனை காவல்துறை அதிகாரிகளில் தொடைகள் பிளக்கப்பட்டது தலைகள் உடைக்கப்பட்டது என்பதெல்லாம் இன்னமும் செய்தி பதிவுகளில் ஆதாரமாக இருக்கிறது... அந்த இடங்களில் போலீசார் இது போன்று திருப்பித் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உண்மையிலேயே போலீசுக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்... ஆனால் அங்கெல்லாம் அடியை வாங்கிக் கொண்டு, ஒரு அப்பாவி இளைஞனை அடித்ததோடு மட்டுமல்லாது அவனை பல பிரிவுகளின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள் இதை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...

தமிழ்ச்செல்வன்Aug 18, 2026 - 11:02:55 AM | Posted IP 162.1*****

பல நூறு பேர் கூடி இருக்கும் இடத்தில் வயதுவந்த வாலிபனை அவசியமே இல்லாமல் ஒருவர் கண்ணத்தில் அறைந்தால் அவன் வாய் மூடி கடந்துதான் போக வேண்டுமா?? அவன் பார்வையில் அவன் எந்த தவறும் செய்யவில்லை, கண்ணத்தில் அடிப்பதற்கு முன்புவரை சட்டப்படி அவன் எந்த தவறையும் செய்யவில்லை, அவனுடைய உரிமைக்காகவே வாதிட்டான், அவனை தடித்த வார்த்தைகளை/ கெட்ட வார்த்தைகளை பேச தூண்டியது அங்கு நடந்த நிகழ்வுகள் தானே தவிர.... அவனாக அதை பேசும் அவசியம் எழவே இல்லை.. காவலர்களே உங்களிடம் அதிகாரம் வரம்பற்று குவிந்து கிடக்கலாம், நீங்கள் நினைத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் கண்டிக்கலாம், தண்டிக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் 'மனிதாபிமானத்தோடு" நடந்து கொள்ளுங்கள், அடித்த அந்த காவல்துறை அதிகாரி மகன் அந்த இடத்தில் இருந்திருந்து"எந்த தவறுமே செய்யாத நிலையில்" இத்தனை பேர் கூடி இருக்கும் இடத்தில் யார் என்றே தெரியாத யாரோ ஒருவர் கை நீட்டி அடித்திருந்தால் அவர் அதனை எப்படி எடுத்துக் கொள்வார்???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory