» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: தம்பதி பலி!

வியாழன் 16, ஜூலை 2026 8:46:32 AM (IST)

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (59), அவரது மனைவி லதா (54) ஆகியோர் பெங்களூரில் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். சொந்த ஊர் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காகத் தங்கமாரியப்பன், லதா மற்றும் லதாவின் தம்பி செந்தில்குமார் (47) ஆகியோருடன் காரில் பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளனர். காரைச் செந்தில்குமார் ஓட்டியுள்ளார்.

கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு நைலான் கயிறு பாரம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் 2 லாரிகள் மீது மோதியது. இதில் கார், வாகனங்களுக்கு இடையே சிக்கி சேதமடைந்தது.

இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தங்கமாரியப்பன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் வாகன ஓட்டிகள் மீட்டுத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றித் தங்கமாரியப்பன் உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாகத் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். இது குறித்துத் தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்டெய்னர் லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (52) என்பவரைக் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory