» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!

செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது, எஸ்.பி. வேலுமணி அணியில் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடம்பெற்றிருந்தார்.

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பின், இரு அணிகளும் இணைந்த நிலையில், கடந்த வாரம் பதவி பறிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பதவி வழங்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு, அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலர் பதவி வழங்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டச் செயலர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேற்று நேரில் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது கரூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகுவதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்  தெரிவித்திருப்பதாவது: "எம்.ஜி.ஆரின் லட்சியப் பாதையிலும், ஜெயலலிதாவின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான். பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல; இரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், இந்த இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் நாம் சந்தித்தது அரசியல் மட்டும் அல்ல; அப்பட்டமான அதிகார அடக்குமுறையும், நம் தொண்டர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட துயரங்களும் தான். அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. என் இரத்தத்தின் இரத்தமான கட்சி தொண்டர்கள் மற்றும் என் குடும்பத்தினர்கள் மீதும் 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. 

என் கட்சி தொண்டர்கள் வாழ்வு சிதைக்கப்பட்டது. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது. அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும், கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணைநின்ற கட்சி தொண்டர்களும் என்பது நாடறியும்,

ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ...

இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம். நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்?

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவரின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம். ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாகக் மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. 

உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக. எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கட்சித் தொண்டர்களும் தயாராக இல்லை.

என் உடன்பிறவா கட்சித் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஜூலை 2ஆம் தேதி தவெகவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory