» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)



மராட்டிய மாநிலத்தின் தடோபா அந்தோரி புலிகள் காப்பகத்திலிருந்து ஆராய்ச்சிப் பணிகளுக்காகக் கொண்டு வரப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்த அரிய வகை வெண்முதுகு பிணந்தின்னி கழுகு, நீலகிரி எப்பநாடு வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

மராட்டிய மாநிலம் தடோபா அந்தோரி புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்த இந்த வெண்முதுகு பிணந்தின்னி கழுகிற்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரேடியோ காலர் (Radio Collar) பொருத்தப்பட்டு வனப்பகுதியில் கண்காணிப்புக்காக விடப்பட்டது. அங்கிருந்து இடம்பெயர்ந்த இக்கழுகு, கர்நாடக மாநிலம் கல்புர்கி பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நலம் தேறிய கழுகை, தென்னிந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் கணிசமாக வாழும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தமிழக மற்றும் கர்நாடக வனத்துறையினர் இணைந்து இக்கழுகினை முதுமலைக் காப்பகத்தில் விடுவித்து அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.

முதுமலையின் புதிய சூழலுக்கு இக்கழுகு எளிதில் பழகாததால், காப்பகத்தை சுற்றியுள்ள கல்லட்டி, எப்பநாடு ஆகிய மலைச்சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து சுற்றித் திரிந்தது. இதற்கிடையே, ஒருமுறை இக்கழுகைப் பிடித்த வனத்துறையினர் சீகூர் வனப்பகுதியிலும் விடுவித்தனர்.

இந்நிலையில், எப்பநாடு வனப்பகுதியில் கழுகு பறந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த மின்கம்பியில் அடிபட்டு, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கழுகின் உயிரிழப்பை உறுதி செய்த தமிழக வனத்துறை அதிகாரிகள், இதுகுறித்து மராட்டிய மாநில வனத்துறையினருக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory