» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான ஆனித் திருவிழா கடந்த ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகள் நடைபெற்றன.
9-ஆம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுத் தேர்களில் எழுந்தருளினர். முதலில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. காலை 7.34 மணிக்குச் சுவாமி நெல்லையப்பர் தேரை அமைச்சர்கள் ரமேஷ், மதன்ராஜா, ராபர்ட் புரூஸ் எம்பி, எம்எல்ஏக்கள் ஆர்.எஸ்.முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன், கிறிஸ்டோபர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தைக் காண 4 ரத வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். தேரின் முன்பாக 75 சிவனடியார்கள் பஞ்சவாத்தியம் முழங்க, தலையில் நடராஜர் சிலையை வைத்து ஆடியபடி ஊர்வலமாகச் சென்றனர். காலை 8.10 மணிக்கு வாகையடி முனையில் பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்ததால் சுமார் 30 நிமிடங்கள் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அசைந்தாடியபடி வந்த சுவாமி தேர் இரவிலும், அதனைத் தொடர்ந்து அம்பாள் தேரும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. இறுதித் தேர்வான சண்டிகேஸ்வரர் தேர் உள்பட 5 தேர்களும் ஒரே நாளில் நிலைக்கு வந்தன.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, உதவி கலெக்டர்கள் ஆயுஷ் குப்தா, பிரியா, மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, அறநிலையத்துறை இணை ஆணையாளர் கவிதா பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில், 1,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ரத வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் கூட்டக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பக்தர்களுக்கு உழவாரப்பணி குழுவினர் மூலம் குடிநீர் மற்றும் விசிறிகள் வழங்கப்பட்டன. டவுன் பகுதியில் விரிவான போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. திருவிழாவின் நிறைவாக இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்குத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி விண்ணப்ப ஆதாரம் என்னிடம் உள்ளது: செங்கோட்டையன்
திங்கள் 29, ஜூன் 2026 8:52:04 AM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!
திங்கள் 29, ஜூன் 2026 8:42:53 AM (IST)

தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை!
ஞாயிறு 28, ஜூன் 2026 1:12:12 PM (IST)

ஆசிரியை தற்கொலை முயற்சி: குருவானவரை மாற்றக் கோரிப் பெண்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம்!
ஞாயிறு 28, ஜூன் 2026 10:48:36 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)


