» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)
குடும்பத்தினர் கண் எதிரே காரில் கடத்தப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கார் விற்பனை ஏஜென்ட், தென்காசியில் பத்திரமாக மீட்கப்பட்டார். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கோமதிசங்கர் (47). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்வது, மற்றும் வங்கிகளில் மாத தவணை கட்ட முடியாமல் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் ஏஜென்டாகவும் தொழில் செய்து வந்துள்ளார்.
இவர் கடந்த 3-ஆம் தேதி, சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தனது மகள் கார்த்திகைப்பிரியா, மருமகன் சண்முகராஜன் மற்றும் மற்றொரு மகள் சத்தியப்பிரியா ஆகியோருடன் திருப்போரூர் அடுத்த இல்லலூர் கிராமத்திலுள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவிற்கு வந்திருந்தார்.
அன்று இரவு அவர்கள் பூங்காவிலிருந்து வெளியே வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் கோமதிசங்கரின் காரை வழிமறித்து, அவரை வெளியே இழுத்துப் போட்டுச் சரமாரியாகத் தாக்கியது. பின்னர், அவரது குடும்பத்தினர் கண் எதிரே கோமதிசங்கரைக் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றித் துணிகரமாகக் கடத்திச் சென்றனர்.
இக்கடத்தல் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடத்தப்பட்ட கோமதிசங்கர் தனது தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி பலரிடமும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் வாங்கித் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுத்தவர்கள் அதைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், கோமதிசங்கர் கோவில்பட்டியை விட்டு வெளியேறி, கடந்த சில மாதங்களாகச் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதை அறிந்த, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த கோவில்பட்டியைச் சேர்ந்த செந்தில் மற்றும் சரவணன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சென்னைக்கு வந்து, கோமதிசங்கரின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்துப் பின்தொடர்ந்து இக்கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்கத் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜங்கம், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் காயார் இன்ஸ்பெக்டர் மருதப்பன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விசாரணையில், கடத்தப்பட்ட கோமதிசங்கர் தென்காசியில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மாமல்லபுரம் திரும்பியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பேரில், ஒரு தனிப்படை போலீசார் பூஞ்சேரி அருகே மாந்தோப்பு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடத்தல் காரைப் பறிமுதல் செய்து, அங்கு தங்கியிருந்த பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த சிவானந்த கண்ணன் (39) மற்றும் விழுப்புரம் மாவட்டம் வளவனூரைச் சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 2 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். மற்றொரு தனிப்படை போலீசார் உடனடியாக தென்காசிக்கு விரைந்து சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கோமதிசங்கரைப் பத்திரமாக மீட்டனர்.
போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து தப்பியோடிய கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான கோவில்பட்டி செந்தில், சரவணன் உள்ளிட்ட 4 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைதான சிவானந்த கண்ணன், கோபிநாத் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)


