» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமண விழாவில் புகுந்து 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - முகமூடி கும்பல் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:52:51 AM (IST)
ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் திருமண விழாவில் புகுந்து 6 பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் மணமகனின் வீட்டின் அருகில் சில இளைஞர்கள் திருமண வாழ்த்து பேனர் அமைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவர், பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்களிடம் திடீரென தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊர் பெரியவர்கள் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று திருமண விழா முடிந்ததைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் மணமகன் வீட்டின் அருகில் மேள தாளத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருமண கூட்டத்திற்குள் புகுந்து, கத்தி கூச்சலிட்டபடியே கையில் இருந்த அரிவாள்களால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
6 பேர் படுகாயம் - வாகனங்கள் சூறை:
இருப்பினும் இந்த கொடூர தாக்குதலில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (49), அவரது மகன் அருள் மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ஆய்க்குடி அருகே ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (20) மற்றும் திருமணத்திற்கு மேளம் அடிக்க வந்த சாம்பவர்வடகரையைச் சேர்ந்த மாடசாமி (19) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், தெருவோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த ஒரு கடையையும் சூறையாடிவிட்டு தப்பியோடியது.
தகவலறிந்து ஆலங்குளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ராயப்பன், அருண்மாறன், ரமேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனை டீன் ரேவதி பாலன் நேரில் பார்வையிட்டு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
உறவினர்கள் சாலை மறியல்:
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, அதில் பதிவாகியுள்ள உருவங்களின் அடிப்படையில் 9 பேர் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சாலையில் நின்றவர்கள் மீது தாக்குதல்: 4 பேர் கைது!
இதற்கிடையே நெல்லை அருகே மானூரை அடுத்த தெற்குப்பட்டி கிராமத்தில் நேற்று மாலையில், 3 மோட்டார் சைக்கிள்களில் கையில் அரிவாளுடன் அதிவேகமாகச் சென்ற கும்பலை அப்பகுதியினர் தடுத்துக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், தெற்குப்பட்டியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (35), முபாரக் (30) ஆகியோரை அரிவாளின் பின்புறத்தால் தாக்கிவிட்டுத் தப்பியது.
காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மானூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 4 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெட்டூர் திருமண வீட்டுத் தாக்குதலில் ஈடுபட்டு தப்பிய கும்பல் இவர்கள்தானா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 4பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!
சனி 30, மே 2026 12:09:48 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)


