» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு

வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய காம கொடூர தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து ெநல்லை போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு அளித்தது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவருடைய தம்பியும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். சிறுமியின் தந்தை 47 வயதான கூலி தொழிலாளி ஆவார். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே தாயார் தனது மகளை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றார். 

அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனால் பேரதிர்ச்சி அடைந்த தாயார், மகளிடம் விசாரித்தார். அப்போது ‘‘தனது நிலைக்கு காரணமான கொடூரன் வேறு யாரும் இல்லை, பெற்ற தந்தையே’’ என்று கூறி சிறுமி கதறி அழுதார். மகளின் நிலையை எண்ணி வருந்திய தாய், ‘‘தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று கருதி அங்குள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் (தற்போது நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்) உத்தரவின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியின் கொடூர தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், அதாவது கடந்த 17.2.2025 அன்று அந்த சிறுமிக்கு 26 வாரமே ஆன நிலையில் ஆண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தது. அந்த குழந்தை மறுநாள் துரதிர்ஷ்டவசமாக இறந்தது. போலீசார் அந்த குழந்தையின் எலும்பை மரபணு பரிசோதனைக்கு அனுப்பினர். 

மரபணு பரிசோதனை அறிக்கையில், சிறுமி பிரசவித்த குழந்தைக்கு அவரது தந்தை தான் காரணம் என்பது உறுதியானது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்கொண்ட நடவடிக்கையால், கடந்த 15.3.2025 அன்று சிறுமியின் தந்தை குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமாா் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறுமியின் தந்தை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.

அப்போது, ‘‘தந்தையே மகளை கற்பழித்தது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகி உள்ளது. இது மிகப்பெரிய கொடூரம். ஒரு தாய் தனது குழந்தையை பெற்ற தகப்பனை நம்பி விட்டுச் செல்ல முடியாத அளவிற்கு பெண்களுக்கு சமுதாயத்தில் இழிவு ஏற்படுத்திய குற்றத்திற்காக, சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ எனக்கூறி நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.

இந்த வழக்கில் திறம்பட விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன், இ்ன்ஸ்பெக்டர்கள் மங்கையர்கரசி, சுதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory