» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!

வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

தூத்துக்குடியில் கப்பலில் பணி செய்யும் போது இறந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்று மிதவை கப்பலில் டேங்க் சுத்தம் செய்ய சென்ற ஜார்ஜ் ஷரோன், சந்தீப்குமார் மற்றும் ஜெனிஸ்டன் ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் மிதவை கப்பலின் அடிப்பாகத்தில் உள்ள டேங்க், கப்பலின் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாகமாகும்.

துறைமுகத்தில் மிதவை கப்பல்கள் நிற்கும்போது, அதன் அடிப்பாகத்தில் உள்ள டேங்கை சுத்தம் செய்து, சீர்படுத்தி கொள்ளும் பணி வழக்கமாக நடைபெறும் பணியாகும். இந்த டேங்கில் உயிர் காற்று (ஆக்ஸிஜன்) இல்லாத நிலையில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 2018-ம் ஆண்டில் இதே போன்ற விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தற்போது 3 இளம் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

டேங்க் சுத்தம் செய்யும் பணிக்கு செய்ய வேண்டிய முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டதா? டேங்கின் மூடி மிக குறுகலாக இருந்ததால் வெல்டிங் இயந்திரம் கொண்டு வந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டதா? என்ற வினாக்கள் எழுகின்றன.

இவை குறித்து விரிவான விசாரணை செய்து, எதிர்காலத்தில் விபத்துகள் நடக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். மிதவை கப்பல் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் இருந்தபோது உயிரிழந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இதனை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் மத்திய அரசையும், மாநில அரசையும் கேட்டு கொள்வதுடன், உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory