» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான் முகத்தை மூடிச் சென்றேனா? முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:05:22 PM (IST)

நான் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த சுற்றுப் பயணத்தின்போது கிடைத்த வரவேற்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை உணர்த்தி இருக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட்டு அதிமுக ஆட்சி 2026-ல் அமையும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி காட்டினார், கருப்பு பலூன் விட்டார். ஆனால், திமுக ஆளும் கட்சியான பிறகு பிரதமரை வரவழைத்து அவர் முன்னிலையில் செலோ, செஸ் போட்டிகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார். அதோடு, பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது வெள்ளைக் குடை கொடுத்தார். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரியாகவும், ஆளும் கட்சியான பிறகு வேறு மாதிரியாகவும் அக்கட்சி நடந்து கொள்ளும்.
அண்மையில் காங்கிரஸ் மாநாடு நெல்லையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சோடங்கர், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 117 இடங்களில் போட்டியிடும் என்று கூறி இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி கடலூரில் பேசும்போது, கடந்த 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அவர்கள் சாறை குடித்து விட்டு சக்கையைத்தான் எங்களுக்குத் தருகிறார்கள். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்று கூறி இருக்கிறார். ஆனால், இதுபற்றி எல்லாம் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.
எனது சமீபத்திய டெல்லி பயணம் குறித்து நான் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் சென்றேன். கடந்த 16-ம் தேதி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு காரில்தான், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்திக்க நான் சென்றேன். என்னுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் வந்தார்கள். நாங்கள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
அதேபோல், அன்றைய இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் அரசு காரில்தான் சென்றேன். அப்போதும் என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வந்தனர். நாங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்துக் கொண்டிருந்தபோது நேரம் ஆகிவிட்டதால், என்னுடன் வந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள். அதன்பிறகு, நான் 10-20 நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு பின்னர் கிளம்பி வந்தேன்.
நான் அரசு காரில் வரும்போது முகத்தை துடைத்ததை, முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் இவ்வாறு அவதூறு செய்திகளை வெளியிடுவது வேதனையாக உள்ளது. இந்திய ஊடகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழக ஊடகங்கள் இப்படி தரம் தாழ்ந்து செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? பரபரப்பான செய்தி கிடைக்கவில்லை என்பதற்காக இதை பரபரப்பாக்குவதா? ஊடகங்கள், பத்திரிகைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஒரு தலைவரை கட்சியின் பொதுச் செயலாளரை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாக சித்தரிப்பது சரியல்ல. இதை பத்திரிகைகள் உணர வேண்டும்.
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலினும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்ததாகப் பேசி இருக்கிறார். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அரசாங்க காரில் சென்று வந்ததை முதல்வர் இப்படி பேசலாமா? முகத்தை மூடிக்கொண்டு செல்ல என்ன இருக்கிறது? பகிரங்கமாகத்தானே உள்ளே சென்றேனே. ஒரு முதல்வர் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். அதனால்தான் அவரை ‘பொம்மை முதல்வர்’ என்கிறோம்.
அவரிடம் சரக்கு இல்லை. எங்களை குற்றம் சொல்வதற்கு அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அப்படி நடக்கவும் இல்லை. எங்கள் ஆட்சி சிறப்பாக இருந்தது. அதனால்தான் அதில் குற்றம் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக முதல்வர் இப்படி பேசுவது முதல்வருக்கு அழகல்ல. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)

ஓபிஎஸ் உட்பட 3பேரை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் திட்டவட்டம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 12:32:30 PM (IST)
