» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓபிஎஸ் உட்பட 3பேரை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் திட்டவட்டம்

வியாழன் 18, செப்டம்பர் 2025 12:32:30 PM (IST)

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய 3 பேரையும் அதிமுகவில் மட்டும் அல்ல, நமது கூட்டணியில் கூட சேர்க்க முடியாது என்று அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால், நம்முடைய இடத்துக்கு சிக்கல் வரும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருதுவதால், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்னால் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

அவர் சென்னை திரும்பியதும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரும் உடனடியாக டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. இணைப்பு குறித்தும் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் பலம் பொருந்திய தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அ.தி.மு.க.வை விட்டு விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். அவர்களுக்கு தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கி உள்ளது என்று அமித்ஷா கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இதை மறுத்த எடப்பாடி பழனிசாமி, 3 பேரையும் கட்சியில் மட்டும் அல்ல, நமது கூட்டணியில் கூட சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும், அ.தி.​மு.க. ஆட்​சியை கவிழ்க்​கும் செயலில் ஈடு​பட்ட யாருக்​கும் மீண்டும் இடமில்லை என்று கூறிவிட்டாராம்.

ஆனால், அமித்ஷாவோ, அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம். எங்களுக்கு (பா.ஜ.க.வுக்கு) ஒதுக்கும் இடத்தில் இருந்து நாங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளித்துக்கொள்கிறோம் என்று கூறினாராம்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, அ.தி.​மு.க.வை அழிக்க நினைத்​தவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நான் எப்படி பிரசாரம் செய்ய முடியும் என்று கூறிவிட்டாராம். மேலும், தென்மாவட்ட ஓட்டுகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், முத்​து​ராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும். அது நடந்தாலே நமது கூட்டணிக்கு தென்மாவட்டங்களில் பலம் அதிகரிக்கும் என்று தெரிவித்தாராம்.

அமித்ஷாவுடனான சந்திப்பு அத்துடன் முடிந்துவிடவே அன்று இரவு டெல்லியிலேயே தங்கிய எடப்பாடி பழனிசாமி, மறுநாள் நிர்வாகிகளுடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்துக்கு வெளியே ஊடகத்தினர் அவருடைய கருத்தை கேட்க காத்திருந்த நிலையில், அவரோ அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சேலத்துக்கு சென்றுவிட்டார். தம்பிதுரை எம்.பி. மட்டும் வெளியே வந்தாலும், ஊடகத்தினரை பார்த்ததும் அவர் பேட்டி எதுவும் அழிக்காமல் சென்றுவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory