» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வியாழன் 31, ஜூலை 2025 8:56:56 AM (IST)

புளியரை அருகே முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..

தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள கற்குடி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஹரிகரன் (28). புளியரை பகுதியில் உள்ள அனந்தகுளத்தில் மீன் குத்தகை ஏலம் எடுத்து அதன் மூலம் மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தார். இந்த குளத்தை கடந்த காலங்களில் ஏலம் எடுத்து மீன் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும், ஹரிகரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் ஹரிகரன் ஏலம் எடுத்த அனந்தகுளத்தில் விஷத்தை கலந்து மீன்களை கொன்றுள்ளனர். இதுகுறித்து ஹரிகரன் அளித்த புகாரின்பேரில் எதிர் தரப்பைச் சேர்ந்த சிலர் மீது புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் எதிர்தரப்பை சேர்ந்த புளியரை வடகாசி மகன் உதயகுமார், மகாலிங்கம் மகன் மகேஷ், முகம்மது ஹனிபா மகன் நவாஸ்கான் (30), சிங்காரவேலன் மகன் சங்கிலி (55), காசி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி இரவில் ஹரிகரனின் வீடு புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன் உள்பட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.மனோஜ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஹரிகரனை 6 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது உறுதியானது.

ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார், மகேஷ் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். எனவே இந்த கொலை வழக்கில் சிக்கிய சங்கிலி, நவாஸ்கான் ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் சிக்கிய காசி மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார். மேலும் ஹரிகரன் கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவன் மீதான விசாரணை தென்காசி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory