» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும்: குஷ்பு கருத்து!

வியாழன் 31, ஜூலை 2025 4:50:56 PM (IST)

தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது: இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.

என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.

தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன். நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது. என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.

இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.

இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory