» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தென்னகத்தின் தொழில்நகரமாக தூத்துக்குடி உருவாகி உள்ளது. நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து வசதி அமைகிறது. தூத்துக்குடி நகரின் மகுடத்தில் முத்தாக துறைமுகம் அமைந்து உள்ளது-. தூத்துக்குடியை ரெயில் பாதையும், 4-வழிச்சாலையும் தழுவிச்செல்வதால் வாகன போக்குவரத்துக்கும் வசதியாக அமைந்து உள்ளது.
அனைத்து போக்குவரத்து வசதியும் கொண்ட நகரமாக தூத்துக்குடி நகரம் திகழ்ந்தால் தான் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வகையில் தூத்துக்குடி மண்ணிலும் விமானம் நிற்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து விமான நிலையத்தை உருவாக்கியது.அதன்படி தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது.
இந்த விமான நிலையம் 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.
ஆனால் இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. குறித்த நேரத்துக்கு விமானங்கள் வராததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 1996-ம் ஆண்டு என்.இ.பி.சி என்னும் தனியார் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து விமானசேவையை தொடங்கியது. இந்த நிறுவனம் தூத்துக்குடி-கொச்சி-சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல 4½ மணிநேரம் ஆனது. இதனால் இந்த சேவை 6 மாதத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஏர்டெகான் தனியார் விமான சேவை தொடங்கப்பட்டது.
தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் கோடை விடுமுறையில் சுமார் 13 ஆயிரம் பேர் தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு சென்று உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சுமார் 15 ஆயிரம் பேர் தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர்.
இதே போன்று கடந்த மாதம் சுமார் 11 ஆயிரத்து 500 பேர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், 11 ஆயிரத்து 241 பேர் சென்னை, பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கும் வந்து உள்ளனர். நாளுக்குநாள் விமானசேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது அவசியமாகிவிட்டது.
இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாறப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது.
இதனால் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் இந்த மாதம் இறுதியில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பிறகு மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். இதனால் தூத்துக்குடி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

அரசு பேருந்தில் திடீரென மயங்கி சரிந்த ஓட்டுநர் : பயணிகள் தப்பினர் - தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 5, ஜூலை 2025 8:07:46 AM (IST)
