» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)
மடப்புரம் கோயில் காவலரை சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது அவர்கள், ‘மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோயில் காவலரான அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீசார் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.
இதுபோன்ற சட்டவிரோத காவல் மரணங்களை ஏற்க முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர்.
பின்னர் நீதிபதிகள், "கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக போலீசார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம். அவ்வாறு இல்லாமல் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.
இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலர் மரணம் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை (ஜூலை 1) விசாரணைக்கு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

வீடுகளுக்கான மின் கட்டண உயராது; 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:45:26 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)
