» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
திங்கள் 19, மே 2025 11:10:06 AM (IST)

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் ஆண்டு தோறும் மே 18-ந் தேதி தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் கோவை கொடிசியாவில் நேற்று நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மனோரஞ்சன் பியாபாரி எம்.எல்.ஏ., எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீமான் பேசும்போது கூறியதாவது: மே 18 துயரம் தோய்ந்த இனப்படுகொலை நாள். தமிழர் என்ற உணர்வை இழந்ததால் சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க, ஒழிக என்று கோஷம் போடாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
எந்த மொழியின் துணையுமின்றியும் தனித்து இயங்கும் ஒரே மொழி தமிழ் தான். அந்த மொழி இன்று அழிந்து வருகிறது. மொழி சிதைந்து அழிந்தால், இனம் அழியும். தமிழுக்கும், தமிழனுக்கும் இறுதி வரை உறுதியாக நின்று போராடுபவனே தமிழன்.
தமிழ்நாட்டில் இருந்து கடைசியாக பிரபாகரனை சந்தித்தது நான் தான். எங்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்ன பேசினோம் என்பது எங்கள் இருவருக்கும் தான் தெரியும். தமிழ்நாட்டிற்குள் 1½ கோடி வட இந்தியர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் இங்கு வந்து குடும்ப அட்டை, வாக்குரிமை பெறுகிறார்கள். இது பேராபத்தை உருவாக்கும்.
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வாக்கு வட இந்தியர்களின் வாக்கு தான். இப்படியே விட்டால், அவர்கள் நமது அரசியலை தீர்மானிப்பார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நாம் 1.1 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். படிப்படியாக வளர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 36 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள்.
இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தோல்வி என்பது தோல்வியல்ல, பயிற்சி. எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்காக வந்த அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக வந்த புரட்சியாளர்கள். தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை உருவாக்கும் லட்சிய கோட்பாடு கொண்டது நாம் தமிழர் கட்சி.
2026-ம் ஆண்டு தேர்தலுக்கு விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. எனது எண்ணம் மட்டும் இந்த சின்னம் அல்ல. சின்னமே நான் தான். 2026-ம் ஆண்டு தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்கும், 117 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்படும். இதில் 134 இடங்கள் இளைஞர்களுக்கு கொடுக்கப்படும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
