» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:54:56 PM (IST)
சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்" என்ற தலைப்பின்கீழ், ‘சமையலறை சாதனங்கள் வழங்கல்’ என்ற உபதலைப்பின்கீழ், சத்துணவு மையங்களுக்கு 25.41 கோடி ரூபாய் செலவில் புதிய சமையல் உபகரணங்கள் 2022-2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 2025-2026 ஆம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்" என்ற தலைப்பின்கீழ், ‘சத்துணவு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள்’ என்ற உபதலைப்பின் கீழ், சத்துணவு மையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சத்துணவு மையங்களில் சமையல் உபகரணங்கள் எரிவாயு இணைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளன என்றும், 2100 சத்துணவு மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறை படிப்படியாக கட்டுவதற்காக 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு நிதி ஒதுக்கியும், 18-04-2025 அன்று விருத்தாசலம் அடுத்த செம்பனக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 09-04-2025 அன்று கடலூர் சத்துணவு மையத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு, எரிவாயு உருளையில் பொருத்தப்பட்டுள்ள ரெகுலேட்டர், காஸ் டியூப் போன்றவை பழுதடைந்திருப்பதே காரணம் என்றும், பல சத்துணவு மையங்களில் இந்த நிலைமைதான் நிலவுகிறது என்றும், புதிய காஸ் அடுப்பு கேட்கப்பட்டாலும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய காஸ் அடுப்புதான் வழங்கப்படுகிறது என்றும் சத்துணவு மையங்களில் பணிபுரிவோர் தெரிவிக்கின்றனர்.
சத்துணவு மையங்களில் உள்ள எரிவாயு அடுப்பைக்கூட புதுப்பிக்க முடியாத திறனற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. புதிய எரிவாயு அடுப்பையே வழங்க முடியாத தி.மு.க. அரசு, சத்துணவு மையங்களை நவீனப்படுத்துவதாகக் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கு போய் சேருகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அரசின் மெத்தனப் போக்குக் காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சத்துணவு மையங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் மாணவ மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், பழுதடைந்த எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக புதிய எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்கிடுமாறும், அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி சரியாக செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திடுமாறும் முதல்வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
