» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல்: நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம்

வியாழன் 17, ஏப்ரல் 2025 5:30:27 PM (IST)

நாங்குநேரி கல்லூரி மாணவர் சினனத்துரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சின்னத்துரை (18), திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய், தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகின்றனர். சின்னத்துரை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் (B.Com. - Corporate Secretaryship) துறையில் படித்து வருகிறார். நேற்று (ஏப்.16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

சுமார் 7.30 மணியளவில் ஒரு அறிமுகம் இல்லாத அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னத்துரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப் பகுதிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் தன்னிடம் பணம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் கட்டையால் அடித்து வலது கையில் காயம் ஏற்படுத்தி தன்னிடமிருந்த அலைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.

கல்லூரி மாணவரிடம் காவல் துறையினர் விசாரணைக்காக சின்னத்துரையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்துவிட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்டபொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறுகிறார். சின்னத்துரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்துக்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் என்று அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சின்னத்துரை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி வீட்டில் இருந்தபோது, 3 பேர் கும்பல் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று இந்த மாணவர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory