» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரம் : மாணவியின் தந்தை மீண்டும் புகார்

வியாழன் 17, ஏப்ரல் 2025 4:20:38 PM (IST)



கோவையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து, செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறை வாசலில் அமர்ந்து தேர்வெழுத வைத்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி முதல்வர்தான் தன்னை வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று விடியோவில் மாணவி கூறியிருந்தார்.

இதனை விசாரித்த போலீசார், பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி தங்கவேல் பாண்டியன், ஆனந்தி, சாந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி இந்த மூவரின் ஜாமீன் மனுக்களை அவர்கள் சரணடையும் நாளில் பரிசீலிக்க கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, பள்ளி நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவியின் தந்தை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். மேலும் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய மூவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory