» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:12:55 PM (IST)

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் அதன்படியான விதிகள் 1948-ன்படியும், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 1958 மற்றும் அதன்படியான விதிகள் 1959-ன்படியும் மற்றும் தொழிற்சாலைகள் சட்டம். 1947 மற்றும் அதன்படியான விதிகளின்படியும் பெயர் பலகையானது தமிழில் வைக்கப்பட வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியும் தேவைப்படும் பட்சத்தில் தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். பின்னர் ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிற மொழிகளில் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். அதாவது 5:3:2 என்ற விகிதாசார அளவில் இருக்க வேண்டும். 

தமிழில் பெயர்ப்பலகை பிரதானமாக அமையப்பெற்றதை காட்சிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, தொழிலாளர் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அளவிலான வணிகர் சங்கங்கள், உணவக உரிமையாளர் சங்கங்கள், வேலையளிப்போர் சங்கங்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை தொடர்பாக இக்குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும். 

மாவட்ட அளவிலான வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட வணிக அமைப்புகள் தங்களின் உறுப்பினர்களுக்கு தகவலை தெரிவித்து தமிழில் பெயர்பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தமிழில் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 2025 மே 2வது வாரத்திற்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஆய்வு மேற்கொண்டு தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

SRINIVASANApr 9, 2025 - 11:09:23 AM | Posted IP 104.2*****

CONGRATULATION COLLECTOR..HATSOFFF

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory