» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:07:03 PM (IST)



திருநெல்வேலியில் மனு அளித்த குறுகிய நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் நிறைவேற்றினார். 

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பாம்பன்குளம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் அவர்களின் மகள்  செல்வி இந்திரா (23) மாற்றுத்திறனாளி மாணவி, தெற்கு கள்ளிகுளத்திலுள்ள கல்லூரியில் பொருளாதாரம் இளநிலை படித்து முடித்து, அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வீட்டிலிருந்தே பயின்று வந்தார்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவி வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் கேட்டு காலை மனு அளிப்பதற்காக வருகை புரிந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்று வந்த மாவட்ட ஆட்சித் தலைவர்  மாணவியின் மனுவினை கனிவுடன் பரிசீலித்து, காத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும், மாற்றுத்திறனாளிக்கான பேருந்து பயண அட்டையும் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாக்கள் அடங்கிய புத்தகம் போன்ற அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான  வழிகாட்டு சிறப்பு பயிற்சி புத்தகங்களும் மாணவிக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து, மாற்றுத்திறனாளி மாணவி செல்வி இந்திரா (வயது 23) தெரிவித்ததாவது: எனது தாய் கூலி தொழில் செய்து மிக கடினமான சூழ்நிலையிலும், என்னை தெற்கு கள்ளிகுளத்திலுள்ள கல்லூரியில் பொருளாதாரம் இளநிலை பிரிவில் சேர்த்து படிக்க வைத்தார். மாற்றுத்திறனாளிகள் மாணவிகள் வாழ்கையில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்ற எண்ணத்திலும், அரசு பணியில் சேர்ந்து பிற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று நினைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு வீட்டிலிருந்தே பயின்று வந்தேன்.

இருந்தபோதிலும், எனது தாயாரின் வருமானத்தை கொண்டு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்குவதற்கும், பிற இடங்களுக்கு சென்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கும் மிகவும் சிரமமாக இருந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்க வந்தேன். என்னை உக்கார வைத்து எனது கோரிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர்  கனிவுடன் கேட்டறிந்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தின் மூலம் என்னை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது அலுவலகத்திற்கு அழைத்து, அவர்களே எனது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான வழி முறைகளை நிறைவு செய்து மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையும், பேருந்து பயண அட்டையினையும் வழங்கினார்கள். அதனை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு செல்லலாம் என காத்திருந்தபோது, போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி பதிலுக்கான புத்தங்களும் மற்றும் பல்வேறு புத்தகங்களும் வழங்கி, போட்டித் தேர்வுகளுக்கு வெற்றி பெறுவதற்கு தேவையான  அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்வதாக  மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்தார்கள்.

இதன்மூலம் எனது கோரிக்கையினை ஏற்று உடனடியாக நிறைவேற்றப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் அவரின் தாயார் நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

IndianApr 8, 2025 - 04:11:18 PM | Posted IP 104.2*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory