» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக எழுதிக் கொடுத்த பொய்களை ஆளுநர் படிக்க வேண்டுமா?” - சீமான் கேள்வி

புதன் 8, ஜனவரி 2025 5:03:42 PM (IST)

"திமுக எழுதிக் கொடுத்த இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று எண்ணி ஆளுநர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுவரை குற்றவாளியின் வாக்குமூலம் என்ன, அவரது பின்புறம் என்ன என்பது குறித்து தகவல் வெளியிடாதது ஏன்?

ஆளுநரை எதிர்த்து நீங்கள் போராடுவதே மற்ற போராட்டங்களையும் பிரச்சினைகளையும் திசை திருப்புவதற்குதான். உங்கள் உரையை நீங்களே எழுதிக் கொள்வீர்களா? நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா, இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார். நீங்கள் எழுதி கொடுத்ததை படிப்பதற்கு அவர் திமுகவிலேயே சேர்ந்துவிடலாம்.

பொங்கல் பரிசு என்பது முதலில் ரூ 5,000 ஆகவும் பிறகு ரூ.2,500 ஆகவும் பிறகு 1,000 ஆகவும் இருந்தது. தற்பொழுது ரூ.103-க்கு வந்துள்ளது. அது ரூ.3-க்கு வரும். முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள். மற்றவர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஆளுநரை எதிர்த்து நினைத்த இடத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். ஆளுநர் செய்த செயல் போராடும் அளவிற்கு குற்றம் என்றால் மாணவி பாதிக்கப்பட்டதுக்கு போராட வேண்டிய அவசியம் இல்லையா? ஏன் அதற்கு அனுமதி மறுக்கிறீர்கள்.

வடலூர் வள்ளலார் பெருவெளியில் மக்கள் நின்று தரிசனம் செய்யக்கூடிய இடத்தில் ஆராய்ச்சி மையம் கட்டுவது ஏற்புடையது அல்ல. வள்ளலாருக்கு நீங்கள் பண்பாட்டு மையம் கட்டுவதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும்.

இந்த அரசு எப்பொழுதுமே வேண்டும் என்பதை செய்வதில்லை. எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்கிறது. பெருவெளியில் ஆராய்ச்சி மையம் கட்ட முடியாது, டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட முடியாது விடமாட்டோம். இறுதியாக ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வேட்பாளர் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுவர்” என்றார். முன்னதாக அவர் சத்திய ஞான சபை, அணையா அடுப்பு, தெய்வ நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு தெய்வ நிலையத்தில் வள்ளலார் தரிசனம் செய்தார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory