» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் : அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளியேற்றம்!!
திங்கள் 6, ஜனவரி 2025 10:34:50 AM (IST)
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், "அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.
காரணம் என்ன? தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியவுடன் தேசிய கீதம் இசைக்க ஆளுநர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதனைவிடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் அதிருப்தியடைந்து அவையில் இருந்து வெளியேறினார் என்றும் தெரியவந்துள்ளது.
ஆளுநர் மாளிகை விளக்கம்: இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விள்ளக்கத்தில், "இந்திய அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் இன்று அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தேசிய கீதத்தை மதிப்பது என்பது முதன்மையான அடிப்படையான கடமையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை தொடங்கும் முன்னர் தேசிய கீதமே இசைக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து சட்டப்பேரவைகளிலும் தேசிய கீதம் தான் கூட்டத் தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் இசைக்கப்படுகிறது.
ஆனால் இன்று ஆளுநர் வருகையின்போது அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் அவைக்கு இதனை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை இசைத்து அவை தனது அரசமைப்பு கடமையை செய்யும்படி அவைத் தலைவருக்கும், முதல்வருக்கும் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது உற்று கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவையில் அமளி: அதேபோல் அவை கூடியவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினார், ஆளுநர் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும், மாற்று அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதாகவும், ஜனநாயக விரோதத்தை கைபிடிப்பதாகவும், கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததோடு அவையில் இருந்து வெளியேறினர்.
மேலும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டப்பேரவைக்கு யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்ததோடு அது தொடர்பாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். பல்வேறு கூச்சல், குழப்பங்களுக்கும் இடையே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதேபோல் பாமகவினரும் அவையில் இருந்து வெளியேறினர்.
வழக்கமாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் சூழலில் இன்று நேரலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக தமிழில் வாசித்து வருகிறார்.
SRINIVASANJan 7, 2025 - 10:59:58 AM | Posted IP 172.7*****