» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி!
சனி 28, டிசம்பர் 2024 12:24:10 PM (IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள், தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர்.
அமைதிப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், காவல்துறை மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணி தேமுதிக அலுவலகத்தை வந்தடைந்ததும், விஜயகாந்த் நினைவிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.