» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வரும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு : அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு!
செவ்வாய் 12, நவம்பர் 2024 3:03:54 PM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை : தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 13.11.2024 புதன்கிழமை அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வருகை தந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வருகை தர இருக்கிறார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எட்டையபுரம் நான்கு வழிச் சாலை விலக்கில் மாலை சுமார் 6 மணியளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அடுத்தநாள் 14.11.2024 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தூத்துக்குடி சத்யா ரிசாட்டில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் காலை 10 மணியளவில் தூத்துக்குடி – எட்டையபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெறும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
அதன்பிறகு பகல் 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிட இருக்கிறார்.
மாலை 4 மணியளவில் தி.மு.க பவளவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி குறிஞ்சிநகர் மெயின் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
பிறகு மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இருநாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கழக செயல்வீரா்கள், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.