» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண் டாக்டர் மீது தாக்குதல் : சென்னையைச் சேர்ந்தவர் கைது
புதன் 6, நவம்பர் 2024 12:54:28 PM (IST)
தூத்துக்குடியில் சொத்து தகராறில் வீடுபுகுந்து பெண் டாக்டரை தாக்கிய சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம். இவரது மனைவி உமா தங்கம் (26), இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். செந்தில் ஆறுமுகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சொத்து பிரச்சனை தொடர்பாக அவரது உறவினர்களான சென்னை தாம்பரத்தை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (43) அவரது மனைவி சுந்தரம் (36) ஆகிய இருவரும் உமா தங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அப்போது ஏற்பட்ட தகராறில் உமா தங்கத்தை 2 பேரும் சேர்ந்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
மேலும் வீட்டில் இருந்த டிவி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தினார்களாம். இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் உமா தங்கம் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.