» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

மூலைக்கரைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள 6 மணிமுத்தாறு பாசனக் குளங்களைத் தூர்வாரி, கரைகளை மேம்படுத்தக் கோரிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கின.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியைச் சுற்றியுள்ள மணிமுத்தாறு பாசனக் குளங்களின் கரைகளை மேம்படுத்தித் தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி, தனியார் பங்களிப்புடன் இக்குளங்களைத் தூர்வாரும் திட்டத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி, ஹெல்ப் கிட்ஸ் நிறுவனம், ஷீட் டிரஸ்ட் மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்பணியைத் தொடங்கியுள்ளன. இத்தூர்வாரும் பணிக்காகக் 'கோமாட்சு' நிறுவனத்தின் சார்பில் வாடகை இல்லா இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணியின் அதிகாரப்பூர்வ துவக்க விழா மூலைக்கரைப்பட்டியில் உள்ள 'தான்தோன்றி குளத்தில்' வைத்து நடைபெற்றது. விழாவிற்கு மூலைக்கரைப்பட்டி பேரூராட்சித் தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். ஷீட் டிரஸ்ட் டாக்டர் பொன்னம்பலம் அனைவரையும் வரவேற்றார். மணிமுத்தாறு பிரிவு அலுவலகப் பொறியாளர் நவீன், மருத்துவர்கள் ராஜசங்கர் மற்றும் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எக்ஸ்னோரா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஹெல்ப் கிட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் ராம்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தூர்வாரும் பணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஹெல்ப் கிட்ஸ் நிறுவன புஷ்கலா, முகைதீன், டேனியல், சமூக ஆர்வலர்கள் செல்வகுமார், குமார், உஷாராணி, முகமது அலி உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் திரளாகப் பங்கேற்று, இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் திருநெல்வேலி மேலாளர் முருகன் நன்றி கூறினார்.
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்தத் தான்தோன்றி குளத்தின் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, அதனைத் தொடர்ந்து அடுத்த குளத்தின் தூர்வாரும் பணியைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூர் பணி ஒருங்கிணைப்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கக் கோரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:08:26 AM (IST)

திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: நாளை முன்பதிவு தொடக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 5:44:45 PM (IST)

அரசு மகளிர் ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 11:49:42 AM (IST)

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)


