» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தசரா திருவிழாவில் சினிமா ஆடல், பாடல்களுக்கு முற்றிலும் தடை: கோவில் நிர்வாகம் எச்சரிக்கை!

செவ்வாய் 16, ஜூன் 2026 8:52:01 AM (IST)

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்திற்குள் ஆபாசமாக உடை அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க தசரா திருவிழா வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் தசரா குழுக்களுக்குக் கோவில் செயல் அலுவலர் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தசரா குழுக்களில் சினிமா கலைஞர்களைக் கொண்டு, சினிமா பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்திற்குள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாச நடனம் ஆடுவதற்கோ அல்லது அநாகரிகமான உடைகளை அணிந்து வரும் நடனக் கலைஞர்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கோ அனுமதி இல்லை.

கடந்த ஆண்டு தசரா திருவிழா ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டபடி, இந்த ஆண்டும் கோவில் வளாகம் மற்றும் பொது இடங்களில் தசரா குழுக்கள் சாதி ரீதியான அடையாளங்கள், இரும்பாலான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை ஒலிப்பதோ, மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதோ கூடாது.

பாரம்பரியக் கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதி:

கோவில் வளாகத்திற்குள் நையாண்டி மேளங்கள், ராஜ மேளங்கள் கொண்டு, முறையாக விரதமிருந்து காப்புக்கட்டி வேடம் அணியும் பக்தர்கள் தங்களின் பாரம்பரிய தசரா கிராமிய நடனங்களை ஆட மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேளம் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் அம்பாளுக்குரிய பாரம்பரியமாக வாசிக்கப்படும் வாத்தியங்களை மட்டுமே இசைக்க வேண்டும். 'பேண்ட் செட்' மற்றும் இதர நவீன இசைக்கருவிகளைக் கொண்டு கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களை வாசிப்பதற்கும், அதற்கு நடனமாடுவதற்கும் அனுமதி கிடையாது. மீறிச் சினிமா பாடல்களோ அல்லது வேறு ஏதேனும் அநாகரிகமான இசையோ இசைக்கப்பட்டால், போலீசார் மூலம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதிவு ரத்து செய்ய எச்சரிக்கை:

விதிமுறைகளை மீறி ஆபாசமான அல்லது அநாகரிகமான நடனங்கள் மற்றும் இதர விதிமீறல்கள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட நடனக் கலைஞர் (நடிகர், நடிகை), நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மற்றும் விண்ணப்பதாரர் ஆகியோருக்கு எதிராகக் காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கோவிலின் விதிமுறைகளை மீறும் தசரா குழுக்களின் உத்தியோகபூர்வ பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும். எனவே, ஆபாச நடனங்களைத் தவிர்த்துவிட்டு, அம்பாளுக்கு உகந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசையை மட்டுமே நடத்தி முத்தாரம்மன் கோவிலுக்கும், அதன் நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கோவில் செயல் அலுவலர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

BabuJun 16, 2026 - 01:00:28 PM | Posted IP 172.7*****

fst kovila suthi alayura madukalai sari panunga da makkal velila nimathiya ukkara mudila mandapam fulla maadum mattu saniyum maadu ulla vantha atha thadunga aadal paadal nigalchiku vanthutanuga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory