» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!

சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, சுர்ஜித்தின் தாயாரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. குற்றப் பத்திரிக்கையிலும் சுர்ஜித் தாயாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27). இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், தனது அக்கா உடனான காதலை கைவிட வலியுறுத்தி கவினை அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.

இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மனைவி கிருஷ்ணகுமாரி, இவர்களது மகன் சுர்ஜித் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித்தின் தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில் 3வது நபராக இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபாலனை கைது செய்தனர். தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், சுர்ஜித்தின் உறவினரான சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளனர். சுர்ஜித்தை தவிர மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், 'சம்பவம் நடைபெற்றபோது ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான் ஜூன் 30 முதல் 98 நாட்களாக சிறையில் உள்ளேன். கவின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி, கவின் தாயார் தமிழ்செல்வி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 17-க்கு தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் சம்பந்தம் இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் வைத்தனர். அதனைத் தொடர்ந்து 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், சுர்ஜித்தின் தாயை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யவில்லை. இந்நிலையில் இந்த இந்த வழக்கை விசாரணை செய்த நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory