» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)



ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. 

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.  இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேவார பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில் இருந்து மேளதாளத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட பரசுராம விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.

அதன்பிறகு பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சப்த கன்னிகள் பூஜை நடந்தது. அதன் பின்னர் கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். அதன்பிறகு வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் ஏந்தி கிழக்கு திசையில்பவுர்ணமி நிலவை நோக்கி ஆரத்தி காட்டி ஆராதனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சாமிதோப்பு குரு சிவச்சந்திரன் அடிகளார் தலைமை தாங்கினார். திருவனந்தபுரம் ஆனந்தமிர்தம் பவுண்டேஷன் தலைவர் ஆனந்த குரு ஸ்ரீ ராஜன் சாய் சுவாமிகள், ஸ்ரீ புஜண்ட நாகநாத சுவாமிகள், அனுஷ்டானத்தின் மடாதிபதி பிரம்ம ஸ்ரீலஸ்ரீ குருநாதானந்தா சுவாமிகள், ஜீவ சமாதி அனுஷ்டம் ஸ்ரீ நானா சுவாமிகள் ஆகியோர் தீபம் ஏற்றி சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சமுத்திர தீர்த்த ஆரத்தி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகோபால், ஜெயராம், அனுசுயா, பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம்பிள்ளை உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory