» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!

சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)



மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட மெதுகும்மல், குளப்புரம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் ஐந்தாம் கட்ட முகாம் மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரி (மரியகிரி) வளாகத்தில் இன்று (06.09.2025) நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் அவர், தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்ற ஆரோக்கியமான திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, நகர்ப்புறத்தில் படித்த, வசதியானவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை, கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். 

இம்முகாமில் சிறந்த முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர். மேலும் வருகை தந்த பொதுமக்கள், பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய், தொழுநோய் பரிசோதனைகள், இரத்த பரிசோதனை, பெண்களுக்கான கருப்பை வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் அனைத்தும் மொத்தமாக கோப்பு வடிவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தமருத்துவ அறிக்கை, ‘மெடிக்கல் ஹிஸ்டரி’ போன்றது. எதிர்காலத்தில் நீங்கள் எந்த சிகிச்சைக்கு, எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இது பயன்படும்.

அதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற முதல் முகாமில் 1650 நபர்களும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரண்டாவது முகாமில் 1438 நபர்களும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மூன்றாவது முகாமில் 2850 நபர்களும், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நான்காவது முகாமில் 1712 நபர்களும் வெளி நோயாளிகளாக கண்டறியப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தொடர்ந்து இன்றைய தினம் ஐந்தாவது முகாம் மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரி (மரியகிரி) வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 1500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களுக்கு அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, வருகை தந்துள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டது. மருத்துவ பரிசோதனை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும் மக்களை அக்கறையுடன், பரிவுடன் கவனிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார். 

ஆய்வில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, துணை இயக்குநர்கள் மரு.கிரிஜா (தொழுநோய்), மரு.ரவிக்குமார் (குடும்பநலம்), கிள்ளியர் வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, ராஜ்குமார், மலங்கரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மனோண்மணி, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory