» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாயமான சகோதரிகள் மீட்பு: மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல் கைது!

திங்கள் 17, மார்ச் 2025 8:29:21 PM (IST)

தக்கலை அருகே மாயமான சகோதரிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். 

குமரி மாவட்டம் தக்கலை அருகே தாயாருடன் வசித்து வந்த 8-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் திடீரென மாயமானார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட எஸ்பி  ஸ்டாலின் உத்தரவின் பேரில் 2 தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில் மாயமான மாணவிகள் இருவரும் கடந்த 13-ந் தேதி அதிகாலை சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவதும், அங்கு டீ குடித்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, மாணவிகளுடன் வந்தவர், தக்கலை யை சேர்ந்த வக்கீல் அஜித்குமார் என தெரிய வந்தது. 

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 12-ந் தேதி நள்ளிரவு தக்கலை பகுதியில் சைக்கிளில் சுற்றி திரிந்த மாணவிகள் இருவரையும் தான் விசாரித்ததாகவும், அவர்கள் உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியதால் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வடசேரி பஸ்நிலையத்தில் இறக்கி விட்டதாகவும் கூறினார். மேலும் வழியில் அவர்களுக்கு டீ வாங்கி கொடுத்து விட்டு, செல்போண் எண்ணை வாங்கி வைத்திருப்பதாகவும் கூறினார். 

இதனை தொடர்ந்து அந்த செல்போன் எண்ணை வாங்கி போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச்-ஆப் ஆகி இருந்தது. தொடர்ந்து மாணவிகளை தேடி வந்த தனிப்படை போலீசார், வக்கீல் அஜித்குமாரையும் ரகசிய மாக கண்காணித்தனர். அப்போது 4 நாட்களாக அஜித்குமாரும் மாணவிகளின் செல்போண் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சிப்பது சைபர் கிரைம் போலீசார் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாணவிகளின் செல்போன், செயல்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேசியதில் 2 பேரும் நெல்லையில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் நெல்லை சென்று 2 மாணவிகளையும் மீட்டு தக்கலை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சகோதரிகள் இருவரில் ஒருவரை, வக்கீல் அஜீத்குமார் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. 

சம்பவத்தன்று சகோதரிகள் இருவரும் ஜாலியாக ஊர் சுற்ற திட்டமிட்டு 12-ந் தேதி இரவு வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் துணிகளை பேக்கில் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் தங்களது சைக்கிளில் நள்ளிரவு தக்கலை வந்தடைந்ததும் எங்கே செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர். அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த அஜித்குமார், உங்களை போலீசாரிடம் பிடித்து கொடுக்க போவதாக மிரட்டி தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

பின்னர் அங்கு வைத்து 8-ஆம் வகுப்பு மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இந்த சம்பவத்தை யாரிடமும் செல்லக் கூடாது என்று மிரட்டி இருவரையும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை பஸ்சில் ஏற்றி விட்டாராம். இப்போது வீட்டிற்கு செல்ல வேண்டாம் எங்காவது சென்று ஊர் சுற்றி விட்டு வீடு திரும்புங்கள் என்று கூறி அனுப்பினாராம்.

ஆனால் மாணவிகள் நெல்லையில் இறங்கி உள்ளனர். அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து அங்கேயே சுற்றி வந்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக போலீசாரால் மீட்கப்பட்டு ள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தக்கலை போலீசார் இந்த வழக்கை மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அவர்கள் விசாரணை நடத்தி வக்கீல் அஜித்குமாரை கைது செய்தனர்.

இதனையடுத்து மாணவிகளை மிரட்டி கடத்தி அடைத்து வைத்து பாலியல் வன் கொடுமை செய்தது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் வக்கீல் அஜீத் குமாரை கைது செய்தனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச் சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரால் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பள்ளி மாணவி களை மிரட்டி கடத்தி பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கிலும் சிக்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory