» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு விஸ்டாம் பெட்டிகளுடன் சர்குலர் ரயில் இயக்க கோரிக்கை!

ஞாயிறு 16, மார்ச் 2025 8:59:01 PM (IST)



திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, புனலூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு விஸ்டாம்  பெட்டிகளுடன் கூடிய சர்குலர் ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி , திருநெல்வேலி, தென்காசி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கொல்லம் மாவட்டங்களில் அதிக அளவில் சுற்றுலா இடங்களும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் மலை சார்ந்த பிரதேசங்களும் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்த பகுதிகளில் அதிக அளவில் ஆன்மீக சுற்றுலா தளங்கள் உள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்கின்றனர். சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே, 180 டிகிரி பனோரமிக் காட்சிகளை வழங்கும் விஸ்டாடோம் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த பெட்டிகள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுடன் பிரபலமான சுற்றுலா தலங்களை இணைத்து பயணிக்கும் ரயில்களில் உள்ளன.  விஸ்டாம் பெட்டிகள் கொண்ட ரயில்கள் மும்பை தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக ஐந்து ரயில்கள், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம் சார்பாக இரண்டு ரயில்களும், வடகிழக்கு ரயில்வே மண்டலம் சார்பாக நான்கு ரயில்களும், மேற்கு ரயில்வே மண்டலம் சார்பாக ஐந்து ரயில்களும், தென்மேற்கு ரயில்வே மண்டலம் சார்பாக நான்கு ரயில்களும், வடக்கு ரயில்வே மண்டலம் சார்பாக மூன்று ரயில்களும் விஸ்டாம் பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கி வருகிறது.  

பெரிய ஜன்னல்கள், கண்ணாடி கூரைகள் மற்றும் கண் கூசா திரைகள் கொண்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் மும்பை-மட்கான் வழித்தடத்தில் 2018 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நாடு முழுவதும் 23 ரயில்களில் 33 ரயில் பெட்டிகளாக விரிவடைந்துள்ளது. கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைகள், பசுமையான தூர்கள் அல்லது சுரங்கப் பாதைகள் மற்றும் பாலங்களின் வரம்பற்ற காட்சிகளை அனுபவிப்பது என எதுவாக இருந்தாலும் சரி - விஸ்டாடோம் ரயில் பயணம் பயணிகளிடையே விருப்பமான ஒன்றாக வேகத்தை அதிகரித்து வருகிறது.  

வழக்கமான ஏசி நாற்காலி கார்களைப் போலல்லாமல், இந்த சிறப்பு பெட்டிகள் 360 டிகிரி சுழற்றக்கூடிய புஷ்பேக் இருக்கைகள், கறையற்ற பெரிய கண்ணாடி ஜன்னல்கள், சிறந்த வானக் காட்சிக்காக ஆண்டி-க்ளேர் திரைகளுடன் கூடிய கண்ணாடி கூரைகள், கண்காணிப்பு தளம், தொங்கும் எல்சிடி திரைகள், வைஃபை மற்றும் பயோ-டாய்லெட்டுகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இத்தகைய பெட்டிகளின் முதன்மை குறிக்கோள், ரயில் கடந்து செல்லும் மாறிவரும் நிலப்பரப்புகளின் கட்டுப்பாடற்ற காட்சிகளுடன் ஆடம்பர பயணத்தை வழங்குவதாகும்.

தற்போது அதிக அளவில் சுற்றுலாவுக்கு பிரச்சி பெற்ற தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கொல்லம் மாவட்டங்களிலும் தனித்தனியாக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பயணிகள் ரயில்கள்  நாகர்கோவில் - திருவனந்தபுரம் - கொல்லம் , திருநெல்வேலி – செங்கோட்டை மற்றும் கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் பயணிகள் ரயில்களை அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ள திருநெல்வேலி – நாகர்கோவில் செங்கோட்டை – புனலூர் மார்க்கங்களில் பயணிகள் ரயில் சேவை குறைவு ஆகும்.

கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் தங்கள் மாநிலத்தின் கீழ் உள்ள பக்கத்து மாவட்டம் திருநெல்வேலிக்கு செல்ல போதிய பயணிகள் ரயில் சேவை இல்லை. இதைப்போல் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்துக்கு செல்ல போதிய பயணிகள் ரயில் சேவை இல்லை. இதனால் இந்த பகுதியில் திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணிகள் ரயில்சேவை மற்றும் திருநெல்வேலி – கொல்லம் நேரடி பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இதிலும் மீட்டர்கேஜ் காலகட்டத்தில் திருநெல்வேலி – கொல்லம் மார்க்கத்தில் தினசரி நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியிருந்து தற்போது காலையில் செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயிலை கொல்லம் வரை நீட்டிப்பு செய்து பின்னர் கொல்லத்திலிருந்து தற்போது திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு செல்லதக்க வகையில் சர்க்குலர் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகின்றது. இந்த சர்க்குலர் ரயில் இயக்கும் போது திருவனந்தபுரம்  - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் எந்த ஒரு புதிய ரயில்சேவையுமின்றி தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களை சிறிய அளவில் காலஅட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்குவதால் ரயில்வேதுறைக்கு எந்தவித புதிய ரயில்சேவையும் கிடையாது. தற்போது இயங்கும் ரயில்களை நீட்டிப்பு செய்து சீர்படுத்தி கால அட்டவணையை சிறிய மாற்றங்களுடன் இயக்கலாம்.

இணைக்கப்பட வேண்டிய ரயில்கள்

1. 56741 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில்
2. 56307 கொல்லம் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில்
3. 56310 கொச்சுவெலி - நாகர்கோவில்  பயணிகள் ரயில்
4. 56707 கன்னியாகுமரி  -திருநெல்வேலி பயணிகள் ரயில்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலியிருந்து காலை  06:50 மணிக்கு புறப்பட்டு இரவு 20:30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேருமாறு இயக்கலாம்.

தோராய காலஅட்டவணை

திருநெல்வேலி – 06:50
செங்கோட்டை – 09:00
கொல்லம்  - 14:00
திருவனந்தபுரம் - 16:10
நாகர்கோவில் - 18:50
திருநெல்வேலி - 20:40

மறுமார்க்கமாக தற்போது இயங்கிவரும் மூன்று ரயில்களையும் இணைத்து திருநெல்வேலி முதல் திருநெல்வேலி வரை சர்க்குலர் ரயிலாக இயக்க வேண்டும்.

1. 56708 திருநெல்வேலி  - கன்னியாகுமரி பயணிகள் ரயில்
2. 56305 நாகர்கோவில் - கொச்சுவெலி பயணிகள் ரயில்
3. 56744 செங்கோட்டை  - திருநெல்வேலி பயணிகள் ரயில்

தோராய காலஅட்டவணை

திருநெல்வேலி - 06:30
நாகர்கோவில் - 07:50
திருவனந்தபுரம் - 10:30
கொல்லம் - 13:00
செங்கோட்டை -18:05
திருநெல்வேலி – 20:15

இவ்வாறு இயக்குவதன் மூலம் ஒருசில தடங்களில் போதிய பயணிகள் ரயில்கள் இல்லாத குறையை இது போக்கும்.  இவ்வாறு சர்க்குலர் ரயிலாக இயக்கி விஸ்டாம்  பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory